ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்... பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தான் சென்ற அஞ்சு...!! நாடு திரும்பினார்


ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்... பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தான் சென்ற அஞ்சு...!! நாடு திரும்பினார்
x
தினத்தந்தி 30 Nov 2023 6:03 AM GMT (Updated: 30 Nov 2023 12:12 PM GMT)

கணவரை தொடர்பு கொண்ட அஞ்சு, நான் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு செல்கிறேன் என கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தானின் பிவாதி பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த். இவருடைய மனைவி அஞ்சு (வயது 34). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உத்தர பிரதேசத்தின் கெய்லர் பகுதியை சேர்ந்த அஞ்சுவுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவருடன் 2019-ம் ஆண்டில் பேஸ்புக் வழியே தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஜூலையில் ஜெய்ப்பூருக்கு செல்கிறேன் என தனது கணவரிடம் கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.

ஆனால், அதன்பின் கணவரை தொடர்பு கொண்ட அஞ்சு, நான் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு செல்கிறேன் என கூறியுள்ளார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

வாகா-அட்டாரி எல்லை வழியே பாகிஸ்தானை அடைந்த அஞ்சு, பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி பாத்திமா என பெயர் மாற்றம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக பேஸ்புக் நண்பராக இருந்து வந்த நஸ்ருல்லாவை (வயது 29) ஜூலை 25-ல் திருமணமும் செய்து கொண்டார்.

அந்நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கிராமத்தில் நஸ்ருல்லாவுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மோகம் 30 நாள், ஆசை அறுபது நாள் என்பது போல், பாத்திமாவுக்கு (அஞ்சு) இந்தியாவுக்கு வரவேண்டும் என தோன்றியுள்ளது.

அதற்காக பாகிஸ்தான் அரசிடம் விண்ணப்பமும் அனுப்பப்பட்டு உள்ளது. நஸ்ருல்லா கடந்த மாதம், பாத்திமா மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவில் உள்ள குழந்தைகளை பார்க்க விரும்புகிறார் என கூறினார்.

எனினும், இந்தியாவுக்கு செல்ல அனுமதி கிடைத்த பின் குழந்தைகளை பார்த்து விட்டு, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி விடுவார். ஏனெனில் பாகிஸ்தானே அவருடைய சொந்த நாடு என்றும் கூறியுள்ளார். இதற்கேற்ப பாத்திமா, வாகா எல்லை வழியே இந்தியாவுக்கு நேற்று மாலை வந்தடைந்து உள்ளார். பின்பு டெல்லிக்கு புறப்பட்டார்.

டெல்லி வந்தடைந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார். ஆனால், மேற்கொண்டு நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். வேறு எதுவும் கூற விரும்பவில்லை என கூறி விட்டு சென்று விட்டார்.


Next Story