திருப்பதி கோவிலில் 3-ந்தேதி முதல் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்
முதல் நாள் நிகழ்ச்சியில் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. 3-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
4-ந்தேதி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கிருஷ்ணர், ருக்மணி எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வருகிறார்கள். 5-ந்தேதி மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
6-ந்தேதி நான்காம் நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வருகிறார்கள். 7-ந்தேதி ஐந்தாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தெப்போற்சவத்தையொட்டி மார்ச் மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் சஹஸ்ர தீபலங்கார சேவை, 5 மற்றும் 6-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
தோமால சேவை, அர்ச்சனை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகின்றன. 7-ந்தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் தெப்போற்சவம் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.