மங்களூருவில் கார்களில் போதைப்பொருள் கடத்திய 4பேர் கைது


மங்களூருவில் கார்களில்  போதைப்பொருள்  கடத்திய  4பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2023 6:45 PM GMT (Updated: 3 Aug 2023 6:46 PM GMT)

மங்களூருவில் கார்களில் கடத்திய போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரு-

மங்களூருவில் கார்களில் கடத்திய போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் உல்லால் போலீசார் தலப்பாடி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினர்.

அப்போது காரில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருந்தது. இதையடுத்து 3 பேரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சஜிப்ப முன்னூரை சேர்ந்த முகமது ஹபீஸ் (வயது 35), நந்தவராவை சேர்ந்த அமீர் (35), அலயங்காடியை சேர்ந்த ஜாகீர் உசேன் (28) என்பதும், அவர்கள் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவா்களிடம் இருந்து 250 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேர் மீதும் கொலை, கொள்ளை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல், மங்களூரு பஜ்பே போலீசார் மூரா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து காரில் இருந்த 2 பேரும் தப்பியோட முயன்றனர். இதனை சுதாரித்து கொண்ட போலீசார், ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் சூரிஞ்சி பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (35) என்பதும், கஞ்சாவை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story