வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி 500 பேரை ஏமாற்றிய 4 பேர் கைது


வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி 500 பேரை ஏமாற்றிய 4 பேர் கைது
x

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி 500 பேரை ஏமாற்றிய 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

வளைகுடா நாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 500 பேரை ஏமாற்றிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கியில் வேலை விசாவிற்கு ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை வசூலித்துள்ளனர். முக்கியமாக கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஏழை மக்களை குறிவைத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 பேரை ஏமாற்றியுள்ளனர்.

இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டவர் ரோஹித் சின்ஹா (36) என்பவர் ஆவார். அறிவியல் பட்டதாரியான இவர் மேற்கு டெல்லியின் மங்கோல்புரியில் வசித்து வருகிறார். மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரேந்திர சிங் (39), ராஜ்மான் குஷ்வாஹா (33), மற்றும் ரவீந்திர சிங் (39) ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 377 இந்திய கடவுச்சீட்டுகள் மற்றும் 6 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் அவர்களது விளம்பரத்தைப் பார்த்து, துருக்கிக்கான வேலை விசாவிற்கு ஒருவர் விண்ணப்பித்துள்ளார். ஐந்து நபர்களுக்கு ரூ.2,50,000 க்கு ஒப்பந்தம் செய்து, தங்கள் பாஸ்போர்ட்டைச் சமர்ப்பித்து பணத்தை செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் செயல்முறையைச் சரிபார்க்க சென்ற போது அவர்களது அலுவலகம் அங்கு இல்லை. இதையடுத்து அவர்கள் போலீசில் புகாரளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ரோஹித் சின்ஹாவை கைது செய்தனர். சின்ஹாவின் கூட்டாளிகள் மூன்று பேர் வளைகுடா நாடுகளில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் 2020 - 2021-ம் ஆண்டுக்கு இடையில் இந்தியா திரும்பியுள்ளனர்.


Next Story