மத்திய பிரதேசத்தில் பட்டாசு குடோனில் வெடி விபத்து; 4 பேர் சாவு - 7 பேர் படுகாயம்


மத்திய பிரதேசத்தில் பட்டாசு குடோனில் வெடி விபத்து; 4 பேர் சாவு - 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Oct 2022 11:56 PM IST (Updated: 21 Oct 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மொரேனா,

மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தின் பான்மோர் நகரில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு குடோன் இருந்தது. இதில் ஏராளமான பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த குடோனில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் அந்த வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது.

இந்த பயங்கர சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 ேபர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இது காண்போரின் கண்களை குளமாக்கின.

இந்த சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

காரணம் என்ன?

இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு மீட்பு பணிகளை மேற்ெகாண்டனர். அத்துடன் போலீசாரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த குடோனில் இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பட்டாசுகள் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். எனவே கியாஸ் சிலிண்டர் எதுவும் வெடித்ததா? அல்லது வேறு எதுவும் பொருட்கள் இருந்ததா? என விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகளும் மாதிரிகளை சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story