கார், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி உள்பட 4 பேர் சாவு


கார், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-26T00:15:16+05:30)

கார், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெலகாவி:

4 பேர் பலி

பெலகாவி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஹலாகி. இவர் குடச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ருக்மணி (வயது 48). இந்த தம்பதியின் மகள் அக்‌ஷதா (22). இந்த நிலையில் ருக்மணி, அக்‌ஷதா ஆகியோர் காரில் வெளியே சென்றனர்.

காரை நிகில் என்பவர் ஓட்டினார். இந்த நிலையில் அவர்கள் பெலகாவி-பாகல்கோட்டை சாலையில் பீடிகொப்பா பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மேலும் தறிக்கெட்டு ஓடிய லாரி, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து முருகோடா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேரை போலீசார் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி ருக்மணி, அக்‌ஷதா, டிரைவர் நிகில் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற அனுபவா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து முருகோடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story