உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது


உப்பள்ளியில்  நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:45 PM GMT)

உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.61¾ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.61¾ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

நகைப்பட்டறை

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கோழி பஜார் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ் ஜாதவ் (வயது60). இவர் அப்பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நகைப்பட்டறையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு பழைய நகைகளை உருக்கி புதிதாக நகை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நகைப்பட்டறையை இரவு வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றார். இதையடுத்து, நகைப்பட்டறையின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கு இருந்த ரூ.61 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிசென்றனர். இதுகுறித்து கைலாஷ் உப்பள்ளி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

4 பேர் கைது

அதில், நகைப்பட்டறையின் கதவை உடைத்து 4 பேர் உள்ளே செல்வதும், பின்னர் அவர்கள் கடையில் இருந்து வெளியே வருவதும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும் நகைப்பட்டறையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மராட்டிய மாநிலம் மிரஜ் பகுதியில் பதுங்கி இருப்பதாக உப்பள்ளி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மிரஜ்ஜிக்கு சென்று அஜய் (வயது32), ஆதிநாத் (40), அஜய் போஸ்லே (38), அல்தாப் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை உப்பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

சிறையில் அடைத்தனர்

விசாரணையில், கைலாஷ் நகைப்பட்டறையில் திருடிய தங்க நகைகளை வைத்து 4 பேரும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இ்ருந்து ரூ.18½ லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அஜய், ஆதிநாத், அஜய் போஸ்லே, அல்தாப் ஆகிய 4 பேரையும் போலீசார் உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story