விசாரணை அதிகாரிகள் போல் நடித்து துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த கும்பல் - போலீசார் விசாரணை
ஜார்கண்டில் விசாரணை அமைப்பின் அதிகாரிகள் போல் நடித்து நான்கு பேர், துப்பாக்கி முனையில் வங்கியைக் கொள்ளையடித்துள்ளனர்.
ஜாம்ஷெட்பூர்,
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இன்று காலை வங்கி ஒன்றில் 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று விசாரணை அமைப்பின் அதிகாரிகள் போல் நடித்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ளனர். உலிதிஹ் காவல் நிலையப் பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று விசாரணை அமைப்பின் அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு வங்கிக்குள் நுழைந்தனர். வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை சேகரித்து, ஊழியர்களை துப்பாக்கி முனையில் வைத்து வங்கியை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் வங்கியை வெளியில் பூட்டிவிட்டு பல லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றனர்.
கிழக்கு சிங்பூமின் மூத்த போலீஸ் சூப்பிரண்டு பிரபாத் குமார், இந்த சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கொள்ளையடிக்கப்பட்ட பணம் 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும், சரியான எண்ணிக்கையைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த போது அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், கொள்ளையின் போது துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.