குஜராத்: 40 பேரை பலி கொண்ட விஷ சாராய சம்பவம்; பின்னணி என்ன...?
குஜராத்தில் 40 பேரை பலி கொண்ட விஷ சாராய சம்பவம் பற்றிய அதிர்ச்சி பின்னணி வெளிவந்து உள்ளது.
வதோதரா,
குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கடந்த திங்கட் கிழமை காலை குறைந்த விலையில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்த பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக நேற்று அதிகரித்தது.
இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கடந்த 12 மணிநேரத்தில் பொடாட் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 40 ஆக உயர்ந்து உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்து உள்ளார். விஷ சாராயம் விற்றதற்காக இதுவரை 10 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
குஜராத்தின் பவ்நகர், பொடாட் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் 50 பேர் வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தில் கொலை, விஷம் வழியே துன்பம் விளைவித்தல் மற்றும் குற்ற சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏறக்குறைய 20 பேர் மீது 3 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன. வதோதரா கிராம போலீசார் இன்று ஜாதுபா ரத்தோட் என்பவரை கைது செய்துள்ளது.
பொடாட் மாவட்டத்தில் பர்வாலா காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். ஒன்றில் இவரது பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறிய அளவில் சாராயம் காய்ச்சுபவர்களில் சிலர், மெத்தனால் அல்லது மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் ரசாயனத்தில் தண்ணீர் கலந்து உள்ளனர். இந்த ரசாயனம் தொழிற்சாலையில் கரைப்பானாக பயன்பட கூடிய அதிக நச்சு தன்மை கொண்டது.
இதனை ஒரு பாக்கெட் ரூ.20 என விற்றுள்ளனர். போலீசாரின் தடயவியல் பகுப்பாய்வில், பாதிக்கப்பட்ட நபர்கள் மெத்தில் ஆல்கஹாலையே குடித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையில், ஆமதாபாத் குடோன் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த ஜெயேஷ் என்ற ராஜூ, குடோனில் இருந்த 600 லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை திருடி சென்றுள்ளார். பின்பு தனது நெருங்கிய உறவினரான சஞ்ஜய் என்பவரிடம் கடந்த 25ந்தேதி ரூ.40 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.
அது ஒரு தொழிற்சாலை கரைப்பான் என தெரிந்தே, பல்வேறு கிராமங்களை சேர்ந்த சாராயம் காய்ச்சுபவர்களிடம் சஞ்ஜய் அதனை விற்றுள்ளார். அவர்களும் அதனை வாங்கி, அதில் வெறும் தண்ணீர் கலந்து சாராயம் என கூறி விற்பனை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த விவகாரம் பற்றி விசாரிக்க குஜராத்தின் உள்துறை, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையிலான 3 நபர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்து உள்ளது. சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை துறையிடம் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளது.