கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்துடன் வாலிபர் கடத்தல் - 5 பேர் கைது


கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்துடன் வாலிபர் கடத்தல் - 5 பேர் கைது
x

கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்துடன் இருந்த வாலிபரை கும்பல் கடத்தி சென்றது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு:

காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்பேல் (வயது 35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து விமானம் மூலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவர் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த 5 பேர் கொண்ட கும்பல், வெளியே வந்த நவ்பேலை ஒரு காரில் கடத்தி சென்றார்கள். இதனால் வீட்டுக்கு வர வெகு நேரமாகியதால் உறவினர்கள் நவ்பேலை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து உறவினர்கள் கொச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விமான நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நவ்பேலை ஒரு கும்பல் காரில் கடத்தி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் நவ்பேல் இருப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கும்பலை பிடித்தனர். விசாரணையில் நவ்பேல் ஒரு கிலோ தங்கத்துடன் விமான நிலையத்துக்கு வந்ததும், இதை அறிந்த கும்பல் அவரை கடத்தி சென்று தங்கத்தை பறித்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கண்ணூர் நகரை சேர்ந்த ஸ்ரீலால் (23), ரெனிஸ் (31), லிபின் (32), அஜ்மல் (27), நஜீப் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நவ்பேலை தங்கத்துக்காக கடத்தி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story