குஜராத்தில் பிறந்து 5 நாட்களேயான சிசுவின் உறுப்புகள் தானம் - 3 குழந்தைகள் புதுவாழ்வு பெற்றன


குஜராத்தில் பிறந்து 5 நாட்களேயான சிசுவின் உறுப்புகள் தானம் - 3 குழந்தைகள் புதுவாழ்வு பெற்றன
x

குஜராத்தில் பிறந்து 5 நாட்களேயான மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

சூரத்,

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் சங்கனி வைர தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி சேத்னா. இந்த தம்பதிக்கு கடந்த 13-ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு எந்த அசைவும் இல்லை. இதை தொடர்ந்து டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக குழந்தையை மற்றொரு ஆஸ்பத்திரிக்கு மாற்றினர்.

எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் குழந்தையிடம் எந்த சலனமும் ஏற்படவில்லை. டாக்டர்கள் குழந்தை குணமடைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உணர்ந்து இறுதியில் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர்.

இந்த நிலையில் மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகள் மற்ற குழந்தைகளுக்குப் புதுவாழ்வை அளிக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உறுப்பு தானம் செய்ய தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து குழந்தையின் கல்லீரல் வெற்றிகரமாக டெல்லியில் உள்ள ஒன்பது மாத குழந்தைக்கு மாற்றப்பட்டது. குழந்தையின் இரண்டு சிறுநீரகங்களும் 13 வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கு புதிய வாழ்க்கையை அளித்து உள்ளது.


Next Story