18-ந்தேதி முதல் 5 நாட்கள்; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் - முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்


18-ந்தேதி முதல் 5 நாட்கள்; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் - முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்
x

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் 18-ந்தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றம், ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மத்திய பகுதியில் மழைக்கால கூட்டத்தொடர், இறுதியில் குளிர்கால கூட்டத்தொடர் என 3 தொடர்கள் நடைபெறுகின்றன.

இதன் மூலம் நாட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதுடன், மக்கள் நலன் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

இந்த 3 தொடர்களை தவிர, அவசர நேரங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்காக சிறப்பு அமர்வுகளையும் நாடாளுமன்றம் காண்கிறது.

அந்தவகையில் ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்காக கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடந்தது.

ஆனால் இது மக்களவை, மாநிலங்களவை என தனித்தனியாக நடைபெறாமல், இரு அவைகளின் கூட்டுக்கூட்டமாக நடத்தப்பட்டது.

அதற்கு முன்னதாக இந்திய விடுதலையின் 50-வது ஆண்டு (பொன்விழா) நினைவாக 1997-ம் ஆண்டு 6 நாள் சிறப்பு அமர்வு நடைபெற்றது.

இதைத்தவிர நாடாளுமன்றத்தின் நள்ளிரவு அமர்வுகள் பல முறை நடந்துள்ளன.

இதில் முக்கியமாக நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் இயங்கியது.

இதைப்போல நாடு விடுதலை அடைந்த வெள்ளிவிழா நினைவாக 1972-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி நள்ளிரவிலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50-வது ஆண்டு நினைவாக 1992-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி நள்ளிரவிலும் நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. அதுவும் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 11-ந்தேதிதான் நிறைவடைந்தது.

மணிப்பூர் விவகாரத்தால் இந்த தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் இதில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்றவையும் நடந்தன.

மழைக்கால கூட்டத்தொடரை தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் ஒன்றுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இந்த சிறப்பு அமர்வு வருகிற 18-ந்தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில், 'நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17-வது மக்களவையின் 13-வது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261-வது அமர்வு) செப்டம்பர் 18 முதல் 22-ந்தேதி வரை 5 அமர்வுகளைக் கொண்டதாகக் கூட்டப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் இந்த அமிர்த காலத்தின் மத்தியில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கு நாடாளுமன்றம் காத்திருக்கிறது' என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த மே 28-ந்தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இறுதிக்கட்ட மெருகூட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருந்தாலும், இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதேநேரம் சிறப்பு கூட்டத்தொடர் பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

இதில் முக்கியமாக, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில தேர்தல்கள் விரைவில் வர இருப்பதால் இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இருக்காது அல்லது தாமதம் ஆகலாம் என்றும், அதனால்தான் சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலை மத்திய அரசு முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர். இதற்காகவே இந்த சிறப்புக்கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் தங்கள் வாதங்களை வலுசேர்த்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய மசோதாக்கள் பலவும் இந்த தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி, நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் அடுத்த இலக்கு உள்ளிட்டவை குறித்தும் இந்த தொடரில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறியுள்ளன.

மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த வெறும் மூன்றே வாரங்களில் சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு விடுத்திருப்பது, ஊடக செய்திகளில் இடம் பிடிக்கவும், இந்தியா கூட்டணி சந்திப்பு தொடர்பான செய்திகளை புறந்தள்ளவும், அதானி விவகாரத்தில் சமீபத்திய தரவுகளை மறக்கடிக்கவுமே என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேநேரம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எதிரொலிக்கும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

இதைப்போல சிறப்பு கூட்டத்தொடர் நடத்தும் தேதி தொடர்பாக சிவசேனா (உத்தவ்) கட்சி அதிருப்தி வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி தனது 'எக்ஸ்' தளத்தில், 'இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நாளில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது. இது இந்து மத உணர்வுகளுக்கு எதிரானது. சிறப்பு கூட்டத்தொடருக்காக அவர்கள் தேதிகளைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம்' என குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியா நடத்தும் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் முதல் இந்த தொடர் நடக்கிறது. ஆண்டுதோறும் பிரதமரின் பிறந்த நாளை தொடர்ந்து அக்டோபர் 2-ந்தேதி (காந்தி ஜெயந்தி) வரை 16 நாட்களை பா.ஜனதாவினர் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story