ஜார்கண்ட் மாநிலத்தில் 5 முக்கிய பயங்கரவாதிகள் சரண்..!
ஜார்கண்ட் மாநிலத்தில் 5 முக்கிய பயங்கரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் 5 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களில் அமர்ஜித் யாதவ் என்கிற லக்கான் யாதவ், மாவோயிஸ்டுகளின் பிராந்திய கமாண்டராக செயல்பட்டவன். 81 வழக்குகளில் தொடர்புடைய இவனது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான்.
இதேபோல உதவி கமாண்டராக செயல்பட்ட ஷாதேவ் யாதவ் ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டவன் ஆவான். இவர்கள் சரண் அடைந்துள்ளனர். மேலும் துணை கமாண்டர்களான நீரு யாதவ், சந்தோஷ் புனியன் மற்றும் பயங்கரவாதி அசோக் பய்கா ஆகியோரும் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் நீரு யாதவ் மீது 60 வழக்குகளும், சந்தோஷ் மீது 27 வழக்குகளும் உள்ளன.
சரண் அடைந்த பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் 9 இதர வகை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல வகைப்பட்ட 1855 தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.