கர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 5 பேர் பலி; நிலச்சரிவு, வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் போதிய மழை பெய்யவில்லை. பல பகுதிகளில் வறட்சி நிலவியது. இந்த நிலையில் தற்போது மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டமான சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா மற்றும் குடகு, வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, கதக், கலபுரகி, ஹாவேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும், நாள் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தில் காவிரி, கிருஷ்ணா, குமாரதாரா, பல்குனி, நேத்ராவதி, துங்கா, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா, கட்டபிரபா, பயஸ்வினி, காளி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆறுகளில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, லிங்கனமக்கி, அலமட்டி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் கனமழையால் மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஏராளமான தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மேலும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குஷால்நகர் அருகே சாய் கிராமத்தில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தங்கள் பகுதியில் தண்ணீர் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில், அந்தப்பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வேறு இடத்துக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல கிராமங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மடிகேரி-மங்களூரு சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஹாரங்கியில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் குஷால்நகர் தாலுகா ரங்கசமுத்திரா பகுதியில் உள்ள சிக்கஹொலே அணை நிரம்பி தண்ணீர் வழிகிறது. இதனை காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
சிக்கமகளூரு மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருவதால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த 15 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடூர் தாலுகாவில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் உள்ள குளம் முழுமையாக நிரம்பி விட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹேமாவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சக்கராயப்பட்டணா பகுதியில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், பம்புசெட் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
சிக்கமகளூரு மாவட்டத்தில் தத்தா குகை கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக முல்லையன்கிரி, சந்திரதிரிகோண மலைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்லத்தி அருவியில் கடும் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லத்தி அருவியையொட்டி உள்ள கோவிலில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீமனே, மாணிக்கதாரா அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் 100 ஏக்கர் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. இதன்காரணமாக விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
சக்லேஷ்புரா அருகே பிஸ்லே பகுதியில் மங்களூரு சாலையில் மீண்டும் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் நேற்று பலத்த மழை கொட்டியது. இதனால் தட்சிண கன்னடாவில் ஓடும் குமாரதாரா, நேத்ராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குமாரதாரா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குக்கே சுப்பிரமணியா கோவிலை தண்ணீர் சூழ்ந்ததால், பக்தர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிக்கிய பக்தர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகன்னடாவில் உள்ள காளி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரள்கிறது. தொடர் கனமழையால் நேற்றும், நேற்று முன்தினமும் கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதேபோல், வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, கதக், கலபுரகி, விஜயநகர், ஹாவேரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கொய்னா அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செந்நிறமாக பாய்வதால், கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் அலமட்டி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் அலமட்டி அணை 10 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்) தண்ணீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 1 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தாவணகெேர மாவட்டம் ஹரிஹரா தாலுகா கும்பலூரை சேர்ந்த கெஞ்சப்பா-லட்சுமி தம்பதிக்கு ஒரு வயதில் கந்தம்மா என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த கந்தம்மா இடிபாடுகளிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தாள். கெஞ்சப்பாவும், லட்சுமியும் பலத்த காயம் அடைந்தனர்.
ஹாவேரி மாவட்டம் மலபுரா கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாக்யா (வயது 3) என்ற சிறுமி பலத்த காயம் அடைந்தாள். உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி அவர் உயிரிழந்தாள்.
விஜயாப்புரா தாலுகா கண்ணூர் கிராமத்தில் தொடர் கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து அந்த கிராமத்தை சேர்ந்த சிவம்மா (வயது 85) என்பவர் பலியானார்.
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா மகானூர் கிராமத்ைத சேர்ந்த மஞ்சுநாத் பசவராஜ் (27) என்பவர், அங்கு ஓடும் துங்கபத்ரா ஆற்றில் கை, கால்களை கழுவ சென்றுள்ளார். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகளவு சென்றதால் கால்தவறி விழுந்தார். இதனால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோட்டா அருகே ஹல்லாடி அருகே கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு கோகுல்தாஸ் பிரபு என்பவர் உயிரிழந்தார்.
கர்நாடகத்தில் தொடர்ந்து ெபய்து வரும் பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் இன்று (புதன்
கிழமை) முதல் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும். தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகர்நாடக மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்
பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாள் முழுவதும் மழை தூரல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.