வீடு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பதற்கு 5 யூனிட் மின்சாரம் இலவசம் - ஜார்க்கண்ட் முதல்-மந்திரி அறிவிப்பு


வீடு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பதற்கு 5 யூனிட் மின்சாரம் இலவசம் - ஜார்க்கண்ட் முதல்-மந்திரி அறிவிப்பு
x

மரம் நட்டு அவற்றைப் பாதுகாப்பதற்கு மக்களுக்கு ஐந்து யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்-மந்திரி அறிவித்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தங்கள் வளாகங்களில் மரம் நட்டு அவற்றைப் பாதுகாப்பதற்கும் மக்களுக்கு ஐந்து யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அறிவித்தார்.

ஜார்க்கண்டில் மரங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. ஆகவே மாநிலத்தின் வனப் பரப்பை அதிகரிக்க இந்த ஆண்டு 2.34 கோடி மரக்கன்றுகளை நட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு இதே சீசனில் 1.8 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன.

அரசின் இந்த சலுகை மாநிலத்தின் நகர்ப்புறங்களில் பசுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வான் மஹோத்சப் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சோரன் கூறுகையில், "நகர்ப்புறங்களை கான்கிரீட்மயம் ஆக்குவதை மனதில் வைத்து, ஒவ்வொரு மரத்தையும் நடுவதற்கும் பாதுகாப்பதற்கும் ஐந்து யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும்.

ஆனால் இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது, சரியான மரமாக இருக்க வேண்டும், இது எதிர்காலத்தில் இயற்கையை பாதுகாக்க உதவும் வகையில் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

வளர்ந்து வரும் நகரமயமாக்கல், சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, ஏனெனில் இது நகரங்களில் இருந்து பசுமை மறைவதற்கு வழிவகுக்கிறது.

கொரோனா தொற்றுநோயிலிருந்து ஜார்கண்ட் ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது, இதற்கு நம் மாநிலம் பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்டதால் மட்டுமே சாத்தியமானது.

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, இயற்கையை அழிப்பதற்கு எதிரானவன். மரம் வெட்டுவதற்கு அனுமதி தேவையில்லை என்ற திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படி நடந்தால், ஜார்கண்ட் காடுகள் பாதுகாப்பாக இருக்காது.

காடுகளுக்கு நடுவே, மர அறுக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. அவை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் செயல்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. எனவே, பாதுகாக்கப்பட்ட காடுகளின் ஐந்து கிமீ சுற்றளவில் இயங்கும் அனைத்து மர அறுக்கும் ஆலைகளையும் மூடுவதற்கு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story