உத்தரபிரதேச பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போட்ட 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு
உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு முத்தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
அலிகார்:
உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் நை கா நாக்லா என்கிற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு முத்தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
இதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 50 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 'டிசார்ஜ்' செய்யப்பட்டனர்.
தடுப்பூசியால் ஏற்படும் வழக்கமான எதிர்வினையால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், தனி மருத்துவ குழு ஒன்று கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுவர்களை பரிசோதித்து அவர்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்ததாகவும் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக தங்களுக்கு தெரிவிக்காமல் தங்களின் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டதாகவும், தடுப்பூசி போடுவதைத் தவிர்க்க சில மாணவர்கள் பள்ளியை விட்டு ஓட முயன்றபோது பள்ளியின் கதவுகள் பூட்டப்பட்டதாகவும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.