மராட்டியத்தில் 2 பஸ்கள் நேருக்குநேர் மோதல்-6 பேர் பலி..!
மராட்டியத்தில் 2 ஆம்னி பஸ்கள் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகினர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு ஆம்னி பஸ்சில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஹிங்கோலிக்கு திரும்பினர். பஸ் மல்காபூர் பகுதியில் உள்ள நந்தூர் நாகா மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தது. எதிரே நாசிக் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பஸ் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக 2 ஆம்னி பஸ்களும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த 32 பயணிகளுக்கு அருகிலுள்ள குருத்வாராவில் முதலுதவி அளிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு புல்தானா மருத்துவமனையில் அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.