தெலுங்கானாவில் ஓடும் ரெயிலில் தீ விபத்து; பயணிகள் உயிர் தப்பினர்


தெலுங்கானாவில் ஓடும் ரெயிலில் தீ விபத்து; பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 7 July 2023 10:44 PM IST (Updated: 7 July 2023 11:15 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரெயிலில் திடீரென தீ

மேற்குவங்காளத்தின் ஹவுரா நகரில் இருந்து தெலுங்கானாவின் செகந்திராபாத் வரை செல்லும் பலக்னுமா விரைவு ரெயில் காலை ஐதராபாத் அருகே சென்று கொண்டிருந்தது. அங்குள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைப்பள்ளி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது ரெயிலின் 2 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியபடி கீழே இறங்கி ஓடினர்.

2 பெட்டிகள் எரிந்து நாசம்

இதற்கிடையில் 2 ரெயில் பெட்டிகளிலும் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வர தாமதமானதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மேலும் 2 பெட்டிகளுக்கு தீ பரவியது. இதனிடையே விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் தீப்பிடித்த ரெயில் பெட்டிகளில் இருந்து பாதிக்கப்படாத ரெயில் பெட்டிகளை பிரித்தனர். இதன் மூலம் மேலும் பல ரெயில் பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து விபத்தை நடைபெற்ற இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 2 ரெயில் பெட்டியில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

உயிர் சேதம் தவிர்ப்பு

உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு பயணிகள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ரெயிலில் எப்படி தீப்பிடித்தது என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தின் சோக வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் ஐதராபாத்தில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story