இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி - இந்தியா கண்டனம்


இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி - இந்தியா கண்டனம்
x

இஸ்ரேலின் ஜெருசலேமில் பாலஸ்தீனியர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த 21 வயது பாலஸ்தீனியர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவங்களால் இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் பாலஸ்தீனியர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,

ஜெருசலேமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.


Next Story