பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி..! பலரின் பார்வை பறிபோனது


பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி..! பலரின் பார்வை பறிபோனது
x

மாகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இந்த கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன.

சாப்ரா,

பீகாரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதே போன்று மீண்டும் ஒரு துயர சம்பவம் பீகாரில் அரங்கேறி உள்ளது. கள்ளச்சாராயத்திற்கு 7 பேர் பலியாகி உள்ளனர். மாகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இந்த கள்ளச்சாராய பலிகள் நடந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் அவர்களது ஊரிலேயே இறந்துள்ளனர். 2 பேர் பாட்னா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இறந்தனர். மேலும் பலர் மோசமாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது தெரியவந்துள்ளது.

இறந்தவா்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலும், பிரேதபரிசோதனை செய்யாமலும் பலர் இறுதிச்சடங்கு செய்துவிட்டதால் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கையை உறுதிபட தெரிவிக்க முடியவில்லை என்றும் போலீசார் கூறினர். பீகாரில் 2016-ம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story