48 சதவிகித மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதவில்லை - தேசிய தேர்வு முகமை


48 சதவிகித மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதவில்லை - தேசிய தேர்வு முகமை
x

1,563 மாணவ-மாணவிகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.

டெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது.

இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

6 தேர்வு மையங்களில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது.

அதேவேளை, 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்து செய்தது. மேலும், 1,563 மாணவ-மாணவிகளுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவ-மாணவிகளுக்கும் இன்று நீட் மறுதேர்வு நடைபெற்றது. சத்தீஷ்கார், குஜராத், அரியானா, மேகாலயா, சண்டிகர் ஆகிய பகுதிகளில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மறுதேர்வு இன்று நடைபெற்றது.

ஆனால், இன்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 48 சதவிகித மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை. 1,563 பேரில் 813 பேர் (52 சதவிகிதம்) மட்டுமே இன்று நீட் மறுதேர்வு எழுதியுள்ளனர். எஞ்சிய 750 பேர் (48 சதவிகிதம்) நீட் மறுதேர்வை எழுதவில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Next Story