அரசு பஸ்-சுற்றுலா வேன்-டேங்கர் லாரி மோதல்: 9 பேர் உடல் நசுங்கி சாவு
ஹாசன் அருகே அரசு பஸ்-சுற்றுலா வேன்- டேங்கர் லாரி மோதிய கோர விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
பெங்களூரு:
9 பேர் சாவு
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா காந்திநகர் கிராமத்தின் அருகே நேற்று இரவு அரசு பஸ்சும், சுற்றுலா வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அந்த சமயத்தில் சுற்றுலா வேன் பின்னால் வந்த டேங்கர் லாரியும் சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ், டேங்கர் லாரி இடையே சிக்கி சுற்றுலா வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சுற்றுலா வேனில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு
படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அரிசிகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் சுற்றுலா வேனில் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கியதும், அவர்கள் தங்கள் கிராமத்துக்கு செல்ல சில கிலோ மீட்டர் தூரமே இருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்ததும் தெரியவந்தது. விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.