கர்நாடக சட்டசபை தேர்தலில் வீட்டில் இருந்தபடியே 94.77 சதவீதம் பேர் வாக்களிப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலில் வீட்டில் இருந்தபடியே 94.77 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் முதன் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக முதலிலேயே விண்ணப்பிக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 99 ஆயிரத்து 529 பேர் வீட்டில் இருந்து வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (எப்ரல்) 29-ந் தேதியில் இருந்து நேற்று (6-ந் தேதி) வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 29-ந் தேதியில் இருந்து வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெற்று வந்தனர். இந்த நிலையில், நேற்றுடன் வீட்டில் இருந்து வாக்களிப்பது நிறைவு பெற்றது.
இதையடுத்து, சட்டசபை தேர்தலில் வீட்டில் இருந்தபடியே 94.77 சதவீதம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றி உள்ளனர். அதாவது 99,529 பேரில், 94 ஆயிரத்து 326 பேர் வீட்டில் இருந்தபடியே வாக்களித்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் வாக்களிக்காமல் உள்ளனர். விண்ணப்பித்த ஏராளமான முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விண்ணப்பித்து, ஓட்டளிக்காமல் இருக்கும் வயதானவர்கள் வருகிற 10-ந் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின்போது வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி கொள்ளலாம். வீட்டில் இருந்து வாக்களிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதற்கு வயதானவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.