மாட்டிறைச்சி கடத்திய காருக்கு தீவைப்பு- பதற்றம்; போலீஸ் குவிப்பு


மாட்டிறைச்சி கடத்திய காருக்கு தீவைப்பு- பதற்றம்; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

பெங்களூரு அருகே தொட்டபள்ளாப்புராவில் மாட்டிறைச்சி கடத்திய காருக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஸ்ரீராமசேனா அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கடத்தி விற்பவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதற்காக நேற்று அதிகாலையில் தொட்டபள்ளாப்புரா டவுன் பகுதியில் ஸ்ரீராமசேனா அமைப்பினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் இந்துபுராவில் இருந்து ஒரு கார் பாதுகாப்புடன் 5 சரக்கு வாகனங்கள் வந்தன.

அந்த சரக்கு வாகனங்களை ஸ்ரீராமசேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, சரக்கு வாகனங்களில் மாட்டிறைச்சிகள் இருந்தன. இதையடுத்து அந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய ஸ்ரீராமசேனா அமைப்பினர் மாட்டிறைச்சியை சாலையில் வீசி எறிந்தனர். மேலும் சரக்கு வாகன டிரைவர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் சரக்கு வாகனங்களில் இருந்த மாட்டின் தலையை எடுத்து அவர்களின் தலையில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

அத்துடன், மாட்டிறைச்சி கடத்திய வாகனங்களுக்கு பாதுகாப்பாக வந்த காருக்கு ஸ்ரீராமசேனா அமைப்பினர் தீவைத்தனர். அந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தொட்டபள்ளாப்புரா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

அதே நேரத்தில் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை எனக்கூறி ஸ்ரீராமசேனா அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் மாவட்ட கலெக்டர் இங்கு வர வேண்டும் என்றும், மாட்டிறைச்சி கடத்தி விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஸ்ரீராமசேனா அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் பிடித்து சென்றார்கள்.

இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story