'சக்தி' திட்டத்தால் சுற்றுலா சென்ற மனைவி வீடு திரும்பவில்லை; அரசு பஸ்சின் டயரில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற 'குடி'மகன்


சக்தி திட்டத்தால் சுற்றுலா சென்ற மனைவி வீடு திரும்பவில்லை; அரசு பஸ்சின் டயரில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற குடிமகன்
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 6:46 PM GMT)

‘சக்தி’ திட்டத்தால் சுற்றுலா சென்ற மனைவி வீடு திரும்பாததால் ஒசக்கோட்டை பஸ் நிலையத்தில் குடிமகன் ஒருவர் அரசு பஸ்சின் டயரில் தலையை வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

'சக்தி' திட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சி தாங்கள் அறிவித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி கடந்த 11-ந்தேதி பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் 'சக்தி' திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதையடுத்து பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த இலவச பயண திட்டத்தை பயன்படுத்தி கொண்டு ஏராளமான பெண்கள் கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள். இதனால் அரசு பஸ்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன்காரணமாக அரசு போக்குவரத்து கழகத்துக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்கொலை முயற்சி

இது ஒருபுறம் இருக்க, இந்த இலவச திட்டத்தை பயன்படுத்தி கொண்டு சில பெண்கள் நாள் கணக்கில் தாங்கள் நினைக்கும் இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதால், அவர்களது கணவர்மார்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் 'சக்தி' திட்டம் தொடங்கியதால் சுற்றுலா சென்ற தனது மனைவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை என கூறி குடிகார கணவர் ஒருவர் அரசு பஸ்சின் டயரில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் நடந்துள்ளது.

அதாவது, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை பஸ் நிலையத்துக்கு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி வந்தார். அப்போது அங்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சின் டயரில் தலையை வைத்து திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுற்றுலா ெசன்ற மனைவி...

பின்னர் அங்கிருந்த மக்கள் மற்றும் டிரைவர்கள் அந்த நபரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. மேலும், கர்நாடக அரசு பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அறிவித்த 'சக்தி' திட்டத்தை பயன்படுத்தி கொண்டு சுற்றுலா சென்ற தனது மனைவி 10 நாட்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்று கதறி அழுதபடி கூறினார்.

மேலும் கர்நாடக அரசு பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயண திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்போது தான் தன்னை போன்ற கணவன்மார்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார். இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த ஒசக்கோட்டை போலீசார், அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஒசக்கோட்டை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story