அரசு நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய விவசாயி; ஆத்திரமடைந்த முதல்-மந்திரி...!!


அரசு நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய விவசாயி; ஆத்திரமடைந்த முதல்-மந்திரி...!!
x

பீகாரில் அரசு நிகழ்ச்சியில் விவசாயி ஆங்கிலத்தில் பேசிய நிலையில், இது என்ன இங்கிலாந்து நாடா? என முதல்-மந்திரி கேட்டு உள்ளார்.



பாட்னா,


பீகாரின் பாட்னா நகரில் 4-வது வேளாண் திட்டம் என்ற பெயரில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், லகிசராய் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பங்கேற்றார்.

அவர் பேச தொடங்கியதும் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை புகழ்ந்து தள்ளினார். நிர்வாக பட்டப்படிப்பு படித்தவரான அவர், புனேவில் நல்ல வேலையை விட்டு விட்டு சொந்த மாவட்டத்தில் காளாண் வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளார்.

இதற்கு தைரியம் வருவதற்கு அரசின் திட்டம் உதவியது என்றும் அதற்கான சுற்றுச்சூழலை அரசு உருவாக்கி தந்துள்ளது என்றும் பேச்சின்போது அவர் புகழாரம் சூட்டினார்.

புனே நகரில் நல்ல சம்பளத்துடனான வேலையில் இருந்து, விவசாய பணியில் ஈடுபட்டது பற்றிய தனது வாழ்க்கை பயணம் பற்றி கூட்டத்தில் விவரித்து உள்ளார்.

அவர் பேசும்போது அதிக அளவில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். அவரது பேச்சில் ஈர்க்கப்படாத நிதிஷ் குமார், அவரை இடையிலேயே நிறுத்தி, இதென்ன இங்கிலாந்து நாடா? பீகாரில் இருக்கிறீர்கள்.

ஆங்கில வார்த்தைகளாக உபயோகப்படுத்தி பேசி கொண்டு இருக்கிறீர்கள். விவசாய வேலையில் ஈடுபடுகிறீர். விவசாய பணிகளை பொதுஜன மனிதர்கள் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆலோசனை கூற அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால், ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருக்கிறீர்கள். இந்தியில் பேசுங்கள் என கூறியுள்ளார். நிதிஷ் குமாரின் பேச்சை கேட்டு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து அந்நபர் பேசும்போது, அரசு திட்டங்கள் என ஆங்கிலத்தில் பேசியுள்ளார். உடனே இடைமறித்து நிதிஷ் கூறும்போது, என்னது இது? சர்காரி யோஜனா என உங்களால் கூற முடியாதா?

நான் என்ஜினீயரிங் பயிற்சி பெற்றவன். ஆங்கில வழியில் கல்வி பெற்றவன். படிக்கும்போது ஆங்கிலத்தில் பேச வேண்டும். அன்றாட வாழ்க்கையிலும் ஏன் ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருக்கிறீர்கள்? என நிதிஷ் கேள்வி எழுப்பினார்.

எனினும், பொது கூட்டத்தில் இதுபோன்று அவர் நடந்து கொண்டது முற்றிலும் கேலிக்குரியது என பா.ஜ.க. மூத்த தலைவரான நிகில் ஆனந்த் கூறியுள்ளார்.


Next Story