மராட்டிய மாநிலத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற நபர்!
கிரிக்கெட் பேட்டைக் கொண்டு தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் அடித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காசர்வடவல்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் பாக்தி(29). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி பாவனா(24), தனது குழந்தைகளான அன்குஷ்(8) மற்றும் குஷி(6) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டில் சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அமித் பாக்தி, தனது மனைவியை பார்ப்பதற்காக அவரது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பாவனா மற்றும் இரு குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமித் பாக்தி, கிரிக்கெட் பேட்டைக் கொண்டு தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் அடித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பியோடிய அமித் பாக்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.