மணமகள் நள்ளிரவில் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியால்... நின்று போன திருமணம்


மணமகள் நள்ளிரவில் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியால்... நின்று போன திருமணம்
x

அசாமில் மணமகள் நள்ளிரவில் அனுப்பிய ஒரு வாட்ஸ்அப் செய்தியால் அவரது திருமணம் நின்று போன அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.



கவுகாத்தி,


அசாமில் கவுகாத்தி நகரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அடுத்த நாள் தம்பதியாக மாற இருந்த நிலையில், முந்தின நாள் இரவில் அந்த சம்பவம் நடந்தேறி உள்ளது.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணமக்கள் அதற்கான கனவில் இருப்பது வழக்கம். ஆனால், அடுத்த நாள் திருமணம் நடைபெற இருந்த சூழலில், மணமகள் வாட்ஸ்அப் வழியே நள்ளிரவில் மணமகனுக்கு ஒரு தகவலை அனுப்பியது அவரது திருமணம் நின்று போக வழி செய்து விட்டது.

அப்படி என்ன அனுப்பி விட்டார் என்று தெரிந்து கொள்ள நமக்கே ஆர்வம் தொற்றி கொள்கிறது. பொதுவாக, திருமணத்திற்கு முன்பு மணமக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வது என்பதே முன்பெல்லாம் அரிது.

ஆனால், நவீன காலத்தில் அதுவும் மொபைல் போன்ற சாதனங்கள் கைக்கு கிடைத்து விட்ட சூழலில், ஒருவருக்கு ஒருவர் குறுஞ்செய்தி அனுப்புவது, போன் செய்து பேசுவது, சாட்டிங் செய்வது, வீடியோ கால் செய்வது, ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருவது என பல செயல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக மணமகளுக்கு பிடித்த பொருட்களை மணமகன் பரிசாக வழங்குவதும் உண்டு. அதுபோன்று அசாமின் பார்பேட்டா மாவட்டத்தின் ஹவுலி நகரை சேர்ந்த அந்த மணமகளுக்கு, மணமகன் அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

ஆனால், அதனை பிரித்து, பார்த்த மணமகளுக்கு ஆத்திரம் வந்துள்ளது. உடனே, மொபைல் போனில் வாட்ஸ்அப் செய்தி வழியே, ஒரு பொறியியலாளராக இருந்து கொண்டு இது போன்ற தரம் குறைந்த ஷாம்பூவை வாங்கி பரிசாக அனுப்பி இருக்கிறீர்களே என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

சிறிது நேரம் கழித்து, மணமகனிடம் இருந்து பதில் செய்தி வந்துள்ளது. அதனை பார்த்த மணமகளுக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. தன்னை அவமதிக்கும் வகையில் குறிப்பிட்டதற்காக, மணமகன் திருமணமே வேண்டாம் என கூறி அதனை நிறுத்தி உள்ளார். அதனையே செய்தியாக மணமகளுக்கு அனுப்பி உள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மணமகள் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவர்களும் அதிர்ந்து போய், கவுகாத்தி நகரில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றுள்ளனர். மணமகனை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

அவரது முடிவை மாற்றி கொள்ளும்படியும், தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளும்படியும் கெஞ்சியுள்ளனர். ஆனால், அது பலனளிக்கவில்லை. மணமகன் தனது முடிவில் இருந்து மாறவில்லை.

இதனால், வேறு வழியின்றி மணமகள் குடும்பத்தினர் போலீசில் மணமகன் மீது புகார் அளித்துள்ளனர். போலீசாரும், வாட்ஸ்அப் செய்தியை சேகரித்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னே, பின்னே யோசிக்காமல் ஒரு வாட்ஸ்அப் செய்தியை மணமகள் அனுப்பியதும், அதற்காக மணமகன் அவமதிப்பு நடந்து விட்டது என்று நினைத்து அந்த திருமணமே வேண்டாம் என முடிவு செய்ததும் அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.


Next Story