மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்


மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்
x

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை மந்திரியான நிதின் கட்காரியின் இல்லத்திற்கு நேற்று மாலை தொலைபேசி வழியே வந்த அழைப்பில் பேசிய நபர் ஒருவர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதுபற்றி டெல்லி போலீசாரிடம், அமைச்சரின் அலுவலகம் தகவல் தெரிவித்து உள்ளது. இதுபற்றிய விவரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை செய்தும் வருகின்றனர்.

கட்காரிக்கு மிரட்டல் வருவது இது முதன்முறையல்ல. கடந்த ஜனவரி 14-ந்தேதி, நாக்பூரில் உள்ள கட்காரியின் பொது தொடர்பு அலுவலகத்திற்கு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்து பேசிய நபர், இதேபோன்ற மிரட்டலை விடுத்து உள்ளார்.

போலீசாரின் விசாரணையில், ஜெயேஷ் புஜாரி என்ற கந்தா என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

அவர், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலை சேர்ந்தவர் என கூறியதுடன், ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டியுமுள்ளார். கொலை வழக்கில் குற்றவாளியான ஜெயேஷ் புஜாரி, கர்நாடகாவின் பெலகாவி நகரில் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவானது. சிறைக்குள் இருந்தபடி சட்டவிரோத வகையில் தொலைபேசியை பயன்படுத்தி கட்காரி அலுவலகத்திற்கு பேசி, மிரட்டியுள்ளார்.

இதன்பின் கடந்த மார்ச் 21-ந்தேதி மீண்டும் கட்காரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.10 கோடி பணம் தரும்படி மிரட்டியிருக்கிறார்.

இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலின் பேரில் நடந்த தீவிர விசாரணையில், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாதிகளுடன் புஜாரிக்கு உள்ள தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story