உக்ரைன் ஆதரவு நிலைப்பாடே உண்மையான விஷ்வகுருவுக்கான சரியான தேர்வு: எமின் தபரோவா
உக்ரைனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு மட்டுமே உண்மையான விஷ்வகுருவுக்கான சரியான தேர்வாக இருக்கும் என உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனின் முதல் வெளியுறவு துறை துணை மந்திரியான எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார்.
அவரது இந்த பயணத்தில், வெளியுறவு துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் இவர் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைனுக்கு வரும்படி அழைப்பு விடுக்க உள்ளதாகவும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஜி-20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வெளியுறவு துறை துணை மந்திரியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வருகை தந்த அவரை டெல்லியில் வெளிவிவகார அமைச்சகத்தின் மேற்கத்திய நாடுகளுக்கான செயலாளர் சஞ்சய் வர்மா சந்தித்து பேசினார்.
இந்நிலையில், எமின் தபரோவா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், முனிவர்கள், சாமியார்கள் மற்றும் குருக்கள் என பலரை பெற்றெடுத்த பூமியான இந்தியாவுக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி.
இன்றைய தினம், விஷ்வகுருவாக, உலகளாவிய ஆசிரியராக மற்றும் நடுவராக இருக்க இந்தியா விரும்புகிறது. எங்களது விசயத்தில், அப்பாவியான பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடும் நபரில், நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என தெளிவாக படம் பிடித்து காட்டப்பட்டு உள்ளோம்.
உக்ரைனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு ஒன்றே, உண்மையான விஷ்வகுருவுக்கான சரியான வாய்ப்பாக அமையும் என அவர் தனது பதிவில் தெரிவித்து உள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு வரும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
போர் ஆரம்பித்ததில் இருந்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியிலான முயற்சிகள் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்றும் அமைதிக்கான எந்தவொரு முயற்சியிலும் பங்காற்ற இந்தியா தயார் என்றும் பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார்.