'2-ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா தன்னிச்சையாக செயல்பட்டார் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்


2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா தன்னிச்சையாக செயல்பட்டார் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
x

கோப்புப்படம்

‘2-ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா தன்னிச்சையாக செயல்பட்டதாக டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதிட்டது.

புதுடெல்லி,

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ, மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகேர்ட்டில் நீதிபதி யோகேஷ் கன்னா அமர்வு முன் தொடங்கியது. சி.பி.ஐ, தரப்பில் ஆஜரான வக்கீல் நீரஜ் ஜெயின் வாதிட்டதாவது:-

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு கடந்த வந்த பாதை குறித்த விவரங்களையும், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டு தனது தீர்ப்பில் தொடக்கத்திலேயே முன் முடிவுக்கு வந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து, விசாரணையை கண்காணித்தது. ஆ.ராசா மத்திய மந்திரியாக இருந்தபோது தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உள்பட யாருடைய பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு முறைகேடாக அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்துள்ளார் என்று அவர் வாதிட்டார்.

இந்த வாதத்தை பதிவுசெய்து கொண்ட நீதிபதி விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.


Next Story