வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபர்
வீட்டு வாடகை கேட்ட பெண்ணை வாலிபர் கத்தியால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
முனேஷ்வரா நகர்:-
வீட்டு வாடகை
பெங்களூரு பண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனேஷ்வராநகரில் வசித்து வருபவர் ஸ்ரீதேவி. இவர், பயாஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். பயாஜ் வீட்டில் நசீர் உள்ளிட்ட இன்னும் சிலரும் வாடகைக்கு வசிக்கிறார்கள். தற்போது பயாஜ் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
இதனால் அவர், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களிடம் வாடகையை வாங்கி தனது வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி ஸ்ரீதேவியிடம் கூறி இருந்தார். அதன்படி, அவரும் பயாஜ் வீட்டில் வசிப்பவர்களிடம் மாதந்தோறும் வாடகை வசூலித்து வந்துள்ளார். ஆனால் நசீர் கடந்த 3 மாதங்களாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார்.
பெண் மீது தாக்குதல்
இதையடுத்து, வாடகை பணம் கொடுக்கும்படி நசீர், அவரது மகன் சதாமிடம் ஸ்ரீதேவி கேட்டுள்ளார். அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த சதாம் வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து வந்து ஸ்ரீதேவியை தாக்கியுள்ளார். இதில், அவரது கை, கழுத்து, முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பலத்தகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சதாம் தன் மீது தாக்குதல் நடத்தியது பற்றி பண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்திருந்தார். ஆனால் நசீர், அவரது மகன் சதாம் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.