மடிகேரியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானை பிடிபட்டது


மடிகேரியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானை பிடிபட்டது
x

குடகு மாவட்டம் மடிகேரியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானையை ‘கும்கி’ யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

குடகு:-

காட்டுயானை அட்டகாசம்

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவிற்கு உட்பட்டது அரேகோடு கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதன்காரணமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் அடிக்கடி இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. விளைநிலங்களையும் நாசப்படுத்தி வருகின்றன. அதுபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியை, காட்டுயானை ஒன்று தாக்கியது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அந்த காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் காட்டுயானையை பிடிக்க அரசிடம் அனுமதி பெற்றனர். மேலும் 4 கும்கி யானைகளை வரவழைத்தனர். அவைகள் துபாரே மற்றும் மத்திகோடுவில் உள்ள யானைகள் முகாம்களில் இருந்து கொண்டுவரப்பட்டன.

கும்கி யானைகள்

கடந்த 2 நாட்களாக 50 வனத்துறையினர் கும்கி யானைகளுடன் வனப்பகுதியில் அந்த காட்டுயானையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலையில் அரேகோடு, ஹொஸ்கேரி அருகே ஒரு காபித்தோட்டத்தில் அந்த காட்டுயானை இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து கும்கி யானைகளுடன் அங்கு சென்ற வனத்துறையினர் அந்த காட்டுயானையை சுற்றி வளைத்தனர்.

அப்போது கால்நடை டாக்டர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை காட்டுயானையின் மீது செலுத்தினார். இதனால் சிறிது நேரத்தில் அந்த காட்டுயானை மயங்கியது. அதையடுத்து அந்த காட்டுயானையின் கால்களில்வனத்துறையினர் கயிறுகளை கட்டினர்.

துபாரே யானைகள் முகாம்

அதையடுத்து சிறிது நேரத்தில் அந்த காட்டுயானை விழித்தெழுந்து முரண்டு பிடித்தது. அப்போது அந்த காட்டுயானையை கும்கி யானைகள் ஆசுவாசப்படுத்தின. பின்னர் கும்கி யானைகள் மற்றும் கிரேன் உதவியுடன் அந்த காட்டுயானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். அதையடுத்து அந்த காட்டுயானையை துபாரே யானைகள் முகாமுக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். இதுபற்றி வனத்துறை அதிகாரி ரமேஷ் கூறியதாவது:-

பிடிபட்டுள்ள காட்டுயானைக்கு 25 முதல் 30 வயது இருக்கும். இது ஆண் காட்டுயானை ஆகும். தற்போது அந்த காட்டுயானை துபாரே யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அங்கு அந்த யானைக்கு கும்கி பயிற்சி அளிக்கப்படும்.

உரிய நடவடிக்கை

இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்படவில்லை. இருப்பினும் அந்த யானையின் நடமாட்டத்தை வனப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வந்தோம். இதேபோல் இன்னொரு காட்டுயானை அட்டகாசம் செய்வதாகவும், அதையும் பிடிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபற்றி அரசிடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரி என்.எஸ்.போசராஜு

இதற்கிடையே அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த காட்டுயானை பிடிபட்டது குறித்து அறிந்த குடகு மாவட்ட பொறுப்பு மந்திரி என்.எஸ்.போசராஜு, மந்தர் கவுடா எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் வந்து அதை பார்வையிட்டனர். மேலும் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் இன்னொரு காட்டுயானையை உடனடியாக பிடிக்கவும் அவர்கள் வனத்துறையினரிடம் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இந்த காட்டுயானை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Next Story