விமான இறக்கையில் அச்சமின்றி அமர்ந்து இருந்த காட்டு புறா; அடுத்து நடந்தது என்ன...?
விமானம் புறப்படும்போது அதன் இறக்கையில் அச்சமின்றி காட்டு புறா அமர்ந்து இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
சமூக ஊடகங்களில் விலங்குகள், பறவைகளின் பரவசம் ஏற்படுத்தும் வீடியோக்கள் அவ்வப்போது வெளிவருவது உண்டு. வேலை சூழலில் சற்று ஓய்வாக அதனை பார்க்கும்போது, நமக்கும் நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தும்.
இதுபோன்று விமானம் ஒன்று புறப்பட தயாரானபோது, அதில் அமர்ந்திருந்த பயணி விமான இறக்கையை கவனித்து உள்ளார். அதில், காட்டு புறா ஒன்று நீண்ட நேரம் அமர்ந்து இருந்தது.
இதனால், அந்த புறா அடுத்து என்ன செய்கிறது என கவனிக்க அதனை வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோவில், புறா அமர்ந்திருந்தபோது விமானம் கிளம்பி மேலே எழ தயாராகிறது. விமானத்தின் வேகம் சற்று அதிகரிக்கிறது.
ஆனால், புறா அப்போதும் அச்சமின்றி விமானத்தின் இயக்கத்திற்கு ஈடு கொடுத்தபடி நின்றது. இதன்பின்னர், விமான வேகம் அதிகரித்ததும் ஒரு கட்டத்தில் நின்றிருந்தபடியே புறா, விமான இறக்கையில் இருந்து நழுவியபடி பின்னோக்கி சென்று பார்வையில் இருந்து மறைந்தது.
ஏறக்குறைய மணிக்கு 500 கி.மீ. வேகம் வரை செல்ல கூடிய விமானத்தின் இறக்கை ஒன்றின்மீது புறா அச்சமின்றி அமர்ந்திருந்த வீடியோ 2 லட்சத்திற்கும் கூடுதலாக பார்வையிடப்பட்டு உள்ளது. பலரும் நகைச்சுவை விமர்சனங்களையும் பகிர்ந்து உள்ளனர்.
அதில் ஒருவர், நான் உங்களுடைய மேலாளரை பார்க்க வேண்டும் என புறா கூறுவது போன்று பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டு இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என ஒருவரும், வாழ்க்கை சரியாக செல்கிறது என நீங்கள் நினைத்து கொண்டிருக்கும்போது, இப்படி நடக்கிறது என மற்றொருவரும் விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர்.