பாலியல் தொல்லை கொடுத்ததால் 'பைக்' டாக்சியில் இருந்து குதித்த இளம்பெண்
பெங்களூருவில் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் ஒருவர் ‘பைக்’ டாக்சியில் இருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ‘பைக்’ டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:-
இளம்பெண்ணுக்கு தொல்லை
பெங்களூரு எலகங்கா அருகே ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர், இந்திராநகரில் வசிக்கும் நண்பரின் வீட்டுக்கு இரவு 11 மணியளவில் புறப்பட்டு சென்றார். இதற்காக 'பைக் டாக்சி'-யை ஆன்லைன் மூலமாக இளம்பெண் முன்பதிவு செய்திருந்தார். அதன்படி, 'பைக் டாக்சி'-யில் ஏறி இளம்பெண் சென்றார். அப்போது இந்திராநகருக்கு செல்லாமல் தொட்டபள்ளாப்புரா
ரோட்டில் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதுபற்றி இளம்பெண் கேட்டதற்கு, அவரது செல்போனை அவர் பிடுங்கி வைத்து கொண்டுள்ளார். மேலும் மோட்டார் சைக்கிளை அவர் வேகமாக ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. அவ்வாறு செல்லும் போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வாலிபர் கைது
இதையடுத்து, எலகங்கா அருகே நாகேனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் இருந்து இளம்பெண் கீழே குதித்தார். இதில், இளம்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. உடனே வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். காயம் அடைந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நடந்த சம்பவங்கள் பற்றி எலகங்கா போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தீபக்ராவ்(வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தின்ட்லு பகுதியில் தங்கி இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
2-வது சம்பவம்
ஏற்கனவே இதுபோல் 'பைக்' டாக்சியில் பயனித்த ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது நடந்தது 2-வது சம்பவம் ஆகும்.