மக்கள் வரி பணத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதா? ஷிண்டே அரசு மீது ஆதித்ய தாக்கரே தாக்கு


மக்கள் வரி பணத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதா? ஷிண்டே அரசு மீது ஆதித்ய தாக்கரே தாக்கு
x
தினத்தந்தி 30 Sep 2023 11:30 PM GMT (Updated: 30 Sep 2023 11:30 PM GMT)

மக்கள் வரி பணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசை ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார்.

புலி நக ஆயுதம்

இங்கிலாந்து நாட்டின் அருங்காட்சியத்தில் உள்ள மராட்டியத்திற்கு சொந்தமான "வாக் நக்" என்ற புலி நக வடிவ ஆயுதத்தை இந்தியா கொண்டுவர மாநில கலாசாரத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார் மற்றும் அவரது துறை அதிகாரிகள் வருகிற 3-ந் தேதி வெளிநாடு செல்ல உள்ளனர். இதேபோல முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் சபாநாயகரின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வரப்படும் புலி நக வடிவ ஆயுதம் இங்கேயே நிரந்தரமாக இருக்குமா? அல்லது கடனாக வழங்கப்படுமா? இது சத்ரபதி சிவசேனா மாகாராஜாவுடையதா அல்லது அவரது காலத்தை சேர்ந்ததா?

தொழில் துறை மந்திரி உதய் சமந்த் ஏன் டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்திற்கு 4 மாதங்களுக்கு முன்பே செல்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.

பயணம் ரத்து

மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே தலைமையில் 50 பேர் கொண்ட குழு வெளிநாடுகளுக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தின்போது என்ன ஆய்வு செய்யப்பட்டது?

விவசாயிகள் இங்கு துயரத்தில் தவித்துக்கொண்டு இருக்கும்போது, அரசு பணம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் பேரில் வீணடிக்கப்படுகிறது. அரசின் அதிகாரப்பூர்வ பயணம் என்ற பெயரில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் சபாநாயகர் ராகுல் நர்வேகர் விடுமுறையை கொண்டாட ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தனர். இந்த பயணத்தின் மூலம் வரப்போகும் முதலீடுகள் மற்றும் எந்தெந்த பகுதிக்கு செல்ல உள்ளார் என்பது குறித்து நான் சமூக ஊடகத்தில் விவரம் கேட்டு பதிவு வெளியிட்ட அடுத்த 30 நிமிடத்தில் அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சிநிரல் இல்லை

உறுதியான நிகழ்ச்சிநிரல் எதுவும் இன்றி வெளிநாட்டு பயணங்கள் திட்டமிடப்படுகின்றன. விடுமுறையில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பினால் சொந்த பணத்தில் செல்லுங்கள். இதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள்?. சரியான கேள்விகளை கேட்ட பிறகு மராட்டியத்தின் சட்டவிரோத முதல்-மந்திரி மற்றும் சபாநாயகரின் பயணங்கள் ரத்து செய்ய நேரிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story