கெஜ்ரிவால் மனைவியை சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்; டெல்லி அரசு பற்றி புதிய கோரிக்கை


கெஜ்ரிவால் மனைவியை சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்; டெல்லி அரசு பற்றி புதிய கோரிக்கை
x

கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியில் இருந்து எந்த சூழ்நிலையிலும் விலக கூடாது என அவருடைய மனைவியிடம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கேட்டு கொண்டனர்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், முக்கிய புள்ளியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

இதற்காக, கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை குழுவினர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர். அமலாக்க துறை காவல் நேற்றுடன் முடிவடைந்ததும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோதும், 2 உத்தரவுகளை மந்திரிகளுக்கு அனுப்பினார். நீர் அமைச்சகம் தொடர்பான உத்தரவு ஒன்றை முதலில் பிறப்பித்ததுடன், அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய 2-வது உத்தரவையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 55 பேர் இன்று கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் கெஜ்ரிவால் மனைவியான சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, எந்த சூழ்நிலையிலும் முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலக கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். டெல்லி அரசை சிறையில் இருந்து நடத்தலாம் என்றும் அவர்கள் அப்போது கூறினர்.


Next Story