மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு..!
காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து உள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது.
புதுடெல்லி
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் போபாலில் நடந்தது.
அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் பொது சிவில் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஆதரிக்கிறது.
ஆனால், ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள், பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள். மக்களை தவறாக வழிநடத்தவும், முஸ்லிம்களை தூண்டிவிடவும் பொது சிவில் சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.தங்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடையும் அரசியல் கட்சிகளை இந்திய முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ஒரு வீட்டில் இவருக்கு ஒரு சட்டம், அவருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த வீட்டை ஒழுங்காக நடத்த முடியுமா? அதுபோல், இரண்டு வகையான சட்டங்கள் இருந்தால் நாட்டை எப்படி நடத்த முடியும்?
அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, பொது சிவில் சட்டம் அவசியம். எதிர்க்கட்சிகள் எங்களை குற்றம் சாட்டிக்கொண்டே 'முசல்மான் முசல்மான்' என்று உச்சரித்தன. ஆனால், அக்கட்சிகள் உண்மையிலேயே முஸ்லிம்களுக்காக உழைத்திருந்தால், முஸ்லிம் குடும்பங்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருக்காது.
'பஸ்மந்தா' முஸ்லிம்களை கூட ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள், சமமாக நடத்தவில்லை. தீண்டத்தகாதவர்களாக கருதுகிறார்கள். தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஓட்டுவங்கி அரசியல் காரணமாக, நாடோடி சாதிகள் கண்டுகொள்ளப்படவில்லை.
அதுபோல், 'முத்தலாக்' முறையை ஆதரிப்பவர்கள், முஸ்லிம் மகள்களுக்கு பெரும் அநீதி இழைக்கிறார்கள். 'முத்தலாக்' முறை, எகிப்து நாட்டில் 80 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டது.
பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமின் அங்கமாக 'முத்தலாக்' இருந்தால், அந்த நாடுகளில் ஏன் தடை விதிக்கப்பட வேண்டும்? 'முத்தாலாக்' முறை, மகள்களுக்கு அநீதியாக அமைவதுடன் ஒட்டுமொத்த குடும்பமும் சீரழிகிறது. என கூறினார்.
பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து உள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி.யம் பொதுசெயலாளருமான சந்தீப் பதக் கூறியதாவது:-
"நாங்கள் ஒரே மாதிரியான சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். 44 வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
அனைத்து மதத்தினரிடம் இருந்தும்,அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது என்று கூறினார்.