குஜராத்தில் போலி விண்ணப்பதாரர்கள் மோசடி வழக்கில் மோசடியை அம்பலப்படுத்திய ஆம்ஆத்மி தலைவர் கைது


குஜராத்தில் போலி விண்ணப்பதாரர்கள் மோசடி வழக்கில் மோசடியை அம்பலப்படுத்திய ஆம்ஆத்மி தலைவர் கைது
x

குஜராத்தில் மோசடி வழக்கில் ஆம்ஆத்மி தலைவரையே போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலி விண்ணப்பதாரர்கள்

குஜராத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் இளநிலை எழுத்தர் பதவிக்கான போட்டித் தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், வினாத்தாள் கசிந்தது. அதனை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டனர். வினாத்தாள் கசிவு விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அரசு போட்டி தேர்வுகளில் போலியான விண்ணப்பதரர்கள் மூலம் தேர்வு எழுதி பலர் அரசு வேலைகளை பெற்ற விவகாரம் இந்த மாத தொடக்கத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆம்ஆத்மி தலைவருக்கு சம்மன்

ஆம்ஆத்மி கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ்சிங் ஜடேஜா இந்த மோசடியை அம்பலப்படுத்தினார். இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் உள்பட பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆம்ஆத்மி தலைவர் யுவராஜ்சிங் ஜடேஜா, போலி விண்ணப்பதாரர்கள் மோசடி தொடர்பாக கடந்த 5-ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அந்த மோசடி தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வரும் மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு யுவராஜ்சிங் ஜடேஜாவுக்கு சம்மன் அனுப்பியது.

மிரட்டி பணம் பறித்தாரா?

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு பவன்நகரில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் யுவராஜ்சிங் ஜடேஜா ஆஜரானார். அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, போலி விண்ணப்பதாரர்கள் மோசடியில் மூளையாக செயல்பட்ட பிரகாஷ் தேவ் மற்றும் மோசடியில் தொடர்புடைய பிரதீப் பாரையா ஆகியோரை யுவராஜ்சிங் ஜடேஜா மிரட்டி ரூ.1 கோடி பறித்ததாக குற்றம் சாட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

போலி விண்ணப்பதாரர்கள் மோசடி வழக்கில் அதனை அம்பலப்படுத்திய ஆம்ஆத்மி தலைவரையே போலீசார் கைது செய்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆம்ஆத்மி கட்சியின் மாநில தலைவர் இசுதன் காத்வி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா ஆகிய இருவரும் யுவராஜ்சிங் ஜடேஜாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


Next Story