மோட்டார் சைக்கிள் மீது பள்ளி பஸ் மோதி மாணவி நசுங்கி சாவு
பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் மீது பள்ளி பஸ் மோதி மாணவி பலியானாள். சகோதரி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்த பரிதாபம் நடந்துள்ளது.
பெங்களூரு
பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் மீது பள்ளி பஸ் மோதி மாணவி பலியானாள். சகோதரி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்த பரிதாபம் நடந்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி
பெங்களூரு நாயண்டஹள்ளியை சேர்ந்த தம்பதியின் மகள்கள் அர்ஷிதா (வயது 18) மற்றும் கீர்த்தனா (16). இவர்களில் அர்ஷிதா தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-வது ஆண்டு படித்து வருகிறார். கீர்த்தனா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார். அர்ஷிதாவின் தந்தை ஆட்டோ டிரைவராகவும், தாய் வீடுகளில் கூலி வேலையும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று காலையில் கீர்த்தனாவுக்கு பி.யூ.சி. முதலாம் ஆண்டில் சேர ஒரு கல்லூரியில் விண்ணப்பம் வாங்க அர்ஷிதாவும், கீர்த்தனாவும் கனகபுரா அருகே ஆரோஹள்ளிக்கு வந்திருந்தார்கள். பின்னர் அங்கிருந்து நேற்று காலையில் பனசங்கரி அருகே தேவேகவுடா பெட்ரோல் பங்க் பகுதிக்கு சகோதரிகள் வந்திருந்தனர்.
தனியார் பள்ளி பஸ் மோதியது
பனசங்கரியில் இருந்து நாயண்டஹள்ளிக்கு விரைவாக செல்ல அர்ஷிதா முடிவு செய்துள்ளார். இதற்காக தனது நண்பரான தர்ஷனை மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வரும்படி அர்ஷிதா கூறியுள்ளார். அதன்படி, அவரும் அங்கு வந்துள்ளார். பின்னர் தர்ஷன், அர்ஷிதா, கீர்த்தனா ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நாயண்டஹள்ளிக்கு புறப்பட்டு சென்றாா்கள்.
அவ்வாறு செல்லும் வழியில் கித்தூரு ராணி சென்னம்மா மேம்பாலம் அருகே வரும் போது தர்ஷன் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த ஒரு தனியார் பள்ளி பஸ் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தர்ஷன், அர்ஷிதா, கீர்த்தனா தூக்கி வீசப்பட்டனர். அப்போது சாலையில் விழுந்த கீர்த்தனாவின் உடலில் தனியார் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.
மாணவி சாவு
இதன்காரணமாக கீர்த்தனா, அவரது சகோதரி அர்ஷிதா, தர்ஷன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அர்ஷிதா, தர்ஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ் டிரைவரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கீர்த்தனாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. விபத்திற்கு காரணமான பஸ்சை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பனசங்கரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.