நடிகை சுமலதா எம்.பி. ஆதரவாளர் பா.ஜனதாவில் இணைந்தார்
நடிகை சுமலதா எம்.பி. ஆதரவாளர் பா.ஜனதாவில் இணைந்தார்.
மல்லேசுவரம்:
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இதில் மண்டியா மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் மண்டியா தொகுதி எம்.பியும், நடிகையுமான சுமலதா பா.ஜனதாவில் சேரலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சுமலதா எம்.பி.யின் ஆதரவாளரும், நண்பருமான இந்துவாலு சச்சிதானந்தா நேற்று பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் பா.ஜனதாவில் இணைந்தார்.
அவருடன் நூற்றுக்கணக்கானோர் அக்கட்சியில் ஐக்கியமாகினர். அவர்களை மந்திரிகள் அஸ்வத் நாராயண், கோபாலய்யா, நாராயணகவுடா, மேல்-சபை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கட்சியின் கொடியை கொடுத்து கட்சியில் சேர்த்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் லிங்கராஜூ உள்பட பலர் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.