அக்குபங்சர் சிகிச்சை... 50 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த மருத்துவர்; அதிர்ந்த போலீசார்
கர்நாடகாவில் அக்குபங்சர் சிகிச்சை என்ற பெயரில் நிர்வாண நிலையிலான 50 பெண்களை மருத்துவர் ஒருவர் ரகசிய வீடியோ எடுத்து போலீசில் சிக்கி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மதிகெரே பகுதியில் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருபவர் மருத்துவர் வேங்கடராமன் என்ற வெங்கட் (வயது 57). அக்குபங்சர் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், 13 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று சிறுமியின் தாயார் போலீசாரிடம் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வெங்கட் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 2 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதில், பல திடுக்கிடும் விசயங்கள் தெரிய வந்தன. அதில் 2 முதல் 3 நிமிடங்கள் ஓட கூடிய மற்றும் 10 முதல் 12 நிமிடங்கள் ஓட கூடிய வகையிலான வீடியோக்கள் கண்டறியப்பட்டன.
அவற்றில் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அவற்றை தடய அறிவியல் பரிசோதனை குழுவினர் மீட்டுள்ளனர். அந்த வீடியோக்களில் அக்குபங்சர் சிகிச்சையின்போது நோயாளிகளின் ஆடைகளை களைய செய்து, அதனை வீடியோவாக எடுத்தது தெரிய வந்து உள்ளது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, சிகிச்சையின்போது நோயாளிகள் ஆடைகளை களைய வேண்டும் என வெங்கட் கேட்டு கொள்வது வழக்கம். சிகிச்சையின்போது உடலின் அந்தரங்க பகுதிகள் உள்பட பல பகுதிகளில் ஊசியை கொண்டு குத்துவது வழக்கம். அது அவசியம் என கூறுவார். இதுபோன்று பெண் ஒருவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆடைகளை களையும்படி கூறியிருக்கிறார்.
ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்து விட்டார். உடனே, தனது மொபைல் போனில் 41 வயது பெண்ணின் நிர்வாண நிலையிலான வீடியோ ஒன்றை அந்த பெண்ணிடம் காட்டி உள்ளார். அவர் கிளினிக்கில் இருந்தபோது வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் குழம்பி போன அந்த பெண், வீடியோவில் இருந்த பெண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். வெங்கட்டின் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்ற மற்ற நோயாளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர பிரதேசத்தின் கூட்டி பகுதியை சேர்ந்த வெங்கட் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து பல முறை தப்பினார். இதற்காக போலியான விபத்து ஒன்றையும் கூட ஏற்படுத்தினார்.
இறுதியில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.