அதானி குழும விவகாரம்: நிபுணர் குழு விசாரிக்க மத்திய அரசு சம்மதம் - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்


அதானி குழும விவகாரம்: நிபுணர் குழு விசாரிக்க மத்திய அரசு சம்மதம் - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
x

கோப்புப்படம்

அதானி குழும விவகாரத்தில் நிபுணர் குழுவை அமைக்கும் சுப்ரீம் கோா்ட்டின் யோசனையை மத்திய அரசு ஏற்றது.

புதுடெல்லி,

அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்- முதலீட்டாளர்களை பாதுகாக்க தேவையான விதிகளை ஏற்படுத்தும் நிபுணர் குழுவை அமைக்கும் சுப்ரீம் கோா்ட்டின் யோசனையை மத்திய அரசு ஏற்றது.

அதானி நிறுவனம்

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டன்.

ஓய்வுபெற்ற நீதிபதி

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் எம்.எல்.சர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 10-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என எம்.எல்.சர்மா வாதிட்டார்.

ஹிண்டன்பர்க் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என விஷால் திவாரி வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறு பாதுகாக்க போகிறோம் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் ஆலோசனை பெற்று 13-ந் தேதிக்குள் (நேற்று) தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

நிபுணர் குழு விசாரிக்கலாம்

இதைத்தொடர்ந்து நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'தற்போதைய சிக்கலை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் எதிர்கொண்டு தீர்வு காண முடியும். இருப்பினும் நிபுணர் குழு அமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை. குழு அமைப்பதால் பண வரத்தில் பாதிப்பு ஏற்படும்' என்றும் தெரிவித்தார்.

அவரது தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.


Next Story