அக்னிபத் திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்களா? காங்கிரஸ் கேள்வி


அக்னிபத் திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்களா? காங்கிரஸ் கேள்வி
x

அக்னிபத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துவதாகவும், அந்த திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பாா்களா? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இதன் காரணமாக தான் அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 27-ந் தேதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

4 ஆண்டுகள் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்துவிட்டு, நமது நாட்டின் இளைஞர்களை காவலாளியாக வேலை செய்ய விடமாட்டோம். அக்னிபத் திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்த்து விடுவார்களா?. அவர்களது பிள்ளைகள் மட்டும் என்ஜினீயர், டாக்டர் உள்ளிட்ட உயர் படிப்புகளை படிக்க வேண்டும். சாதாரண ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவிட்டு, ஏதோ ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்ய வேண்டுமா? அக்னிபத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story