தாமதமாக கிளம்புவதற்காக குடிபோதையில் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமானப்படை அதிகாரி கைது


தாமதமாக கிளம்புவதற்காக குடிபோதையில் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமானப்படை அதிகாரி கைது
x

கோப்புப்படம் 

குடிபோதையில் இருந்த விமானப்படை அதிகாரி சுனில் சங்வான், வெடிகுண்டு புரளியை கிளப்பியதை ஒப்புக்கொண்டார்.

புதுடெல்லி,

டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.55 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்ப தயாராகி கொண்டிருந்தது. சுமார் 4.48 மணியளவில் ரெயில் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, அந்த ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து ரெயில் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த சோதனையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போனில் தொடர்பு கொண்ட அந்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த செல்போன் எண், விமானப்படை அதிகாரி சுனில் சங்வான் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் அந்த ரெயிலில் ஏறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது குடிபோதையில் இருந்த அவர், வெடிகுண்டு புரளியை கிளப்பியதை ஒப்புக்கொண்டார். மும்பை செல்ல வேண்டிய அவர் தாமதமாக கிளம்பியதால் ரெயிலை தவறவிடுவோம் என நினைத்து, ரெயிலை தாமதமாக கிளம்ப செய்வதற்காக இந்த மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story