ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஊழியரை திட்டி, தாக்கிய பயணி கைது
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் வந்து நின்ற பின்பும், அதன் ஊழியர்களிடம் கடுமையாக திட்டி, தாக்கிய பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லி நோக்கி ஏ.ஐ.882 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. வழியில் பயணி ஒருவர், விமான ஊழியர்களுக்கு எதிராக, கடுமையாக, தகாத வார்த்தைகளை பிரயோகித்து உள்ளார்.
அவர்களில் ஒருவரை அடிக்கவும் பாய்ந்து உள்ளார். இதனால், விமானத்தில் சர்ச்சை ஏற்பட்டது. சக பயணிகள் அச்சமடைந்தனர். விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பின்னரும், அந்த பயணி கடுமையாக நடந்து கொண்டார் என ஏர் இந்தியா விமானத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதன்பின், அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுபோன்று நடந்து கொள்ளும் நபர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக விதிகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து லண்டனுக்கு கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஜஸ்கீரத் சிங் பட்டா (வயது 25) என்பவர் பயணம் செய்து உள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்தவரான அவர் விமான பணிப்பெண்கள் இருவரை உடல்ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து, அவருக்கு 2 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.