மராட்டியத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அஜித் பவார் தேர்வு
288 உறுப்பினர்கள் கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார். மராட்டியத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை ஏக்நாத் ஷிண்டே காட்டினார்.
இந்த நிலையில், மராட்டியத்தில் எதிர்க்கட்சித்தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 288 உறுப்பினர்கள் கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உள்ளது. அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார். இதையடுத்து, பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, 'அஜித் பவார் முதிர்ந்த அரசியல்வாதி மற்றும் மிகச்சிறந்த நிர்வாகி' என்றார்.