அஜித் பவாரின் அனுபவம் மராட்டியத்தை மேலும் வலுப்படுத்தும் - ஏக்நாத் ஷிண்டே


அஜித் பவாரின் அனுபவம் மராட்டியத்தை மேலும் வலுப்படுத்தும் - ஏக்நாத் ஷிண்டே
x

மராட்டியத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். சிவசேனா - பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார். மராட்டிய மாநிலத்தில் 8ஆவது துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டது குறித்து அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

"மராட்டியத்தில் தற்போது 1 முதல்-மந்திரி மற்றும் 2 துணை மந்திரிகள் உள்ளனர். இரண்டு இயந்திரங்களை கொண்டு இயங்கிய அரசு, தற்போது 3 இயந்திரங்களை கொண்டுள்ளது. மராட்டியத்தின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது தலைவர்களையும் வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் மராட்டியத்தை மேலும் வலுப்படுத்த உதவும். மராட்டிய அமைச்சரவையில் இடம் பகிர்வது குறித்து விவாதிக்க போதுமான அவகாசம் உள்ளது. மராட்டியத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு 4-5 இடங்கள் கிடைத்தன; இந்த முறை அந்த எண்ணிக்கையை கூட அவர்களால் பெற முடியாது" என்று கூறினார்.


Next Story