நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டம்


நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
x

கோப்புப்படம் 

நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.

புதுடெல்லி,

நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அறிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சிறப்பு கூட்டத்தொடர் என்று கூறினார். ஆனால் மத்திய அரசு பிற்பாடு, இது வழக்கமான கூட்டத்தொடர்தான் என்று விளக்கம் அளித்தது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரையொட்டி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்துகிறது.

இதில், இந்த கூட்டத்தொடர் குறித்து விளக்கம் அளித்து, அவர்களின் கருத்துகள் அறியப்படும் என்று தெரிகிறது.

இந்த கூட்டத்தொடர் நடைபெறும் காலம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இடம்பெறப்போகும் விஷயங்கள் குறித்த ஆர்வத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

சிறப்பு விவாதம்

ஆனால், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த சிறப்பு விவாதம் பிரதானமாக நடைபெறும் என நிகழ்ச்சி நிரல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதா, மாநிலங்களவையின் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்?

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்ற பேச்சும் உலவுகிறது.

நிகழ்ச்சிநிரல் பட்டியலில் இடம்பெறாத சில விஷயங்களும் திடீர் அறிமுகமாக இடம் பெறக்கூடும் என்ற கருத்தும் உள்ளது.

அதேபோல, இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறலாம் என்ற பேச்சு இருக்கிறது. நாடாளுமன்ற பல்வேறு துறை ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டிருப்பதும் அந்த பேச்சுக்கு வலு சேர்த்திருக்கிறது.


Next Story