அசாம், அருணாச்சல பிரதேச அரசுகள் தங்கள் எல்லைப் பிரச்சினையை தீர்க்க வேண்டும்- அமித் ஷா வலியுறுத்தல்
எல்லைப் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு மாநில முதல் மந்திரிகளிடம் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில அரசுகள் தங்கள் எல்லைப் பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மாநில முதல் மந்திரிகள் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பெமா காண்டு ஆகியோரர் பங்கேற்ற கூட்டத்திற்குத் அமித் ஷா இன்று தலைமை தாங்கினார்.
அப்போது முதல் மந்திரிகளிடம் பேசிய அவர், "அமைதியான மற்றும் வளமான வடகிழக்கு மாநிலம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், எல்லைப் பிரச்சனையை விரைவில் தீர்க்குமாறு இரு முதல் மந்திரிகளிடமும் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
இவ்விவகாரத்தில் மத்திய அரசின் அதிகபட்ச உதவிகள் இரு மாநில முதல் மந்திரிகளுக்கும் வழங்கப்படும் என அமித் ஷா உறுதியளித்தார்.
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் 804.1 கி.மீ நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தில் சில பல வனப் பகுதிகள் ஒரு தலைப்பட்சமாக அசாமுக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.
1987 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்தை அடைந்த பிறகு, ஒரு முத்தரப்புக் குழு நியமிக்கப்பட்டது, அதில் சில பகுதிகள் அசாமில் இருந்து அருணாச்சலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த கோரிக்கையை எதிர்த்து அசாம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.